10-ம் வகுப்பு, பிளஸ்-2 பாடங்களை குறைத்தது அதிக மதிப்பெண் பெற உதவும் - மாணவ-மாணவிகள் கருத்து
10-ம் வகுப்பு, பிளஸ்-2 பாடங்களை குறைத்தது அதிக மதிப்பெண் பெற உதவும் என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
காரைக்குடி,
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு பாடங்களை அரசு குறைத்து அறிவித்து உள்ளது. இதற்கு மாணவ-மாணவிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
பீட்டர்ராஜா (அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர்):-தமிழக அரசு அறிவித்துள்ள பாடத்திட்ட குறைப்பு மாணவர்கள் குறைந்த காலக்கட்டத்தில் படிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. எனினும் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்விற்கு குறைக்கப்பட்டதை போல் கருத்தியல் தேர்விற்கும் பாடங்கள் போதுமான அளவு குறைக்க வேண்டும். சமூக அறிவியல் பாடத்தில் இன்னும் ஒரு சில பாடங்களை குறைத்தால் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
தரணிதரன் (10-ம் வகுப்பு மாணவர்):-தமிழக அரசு அறிவித்துள்ள பாடம் குறைப்பு என்பது அனைத்து மாணவர்களுக்கும் பயனாக அமையும். ஏனெனில் இன்னும் குறைந்த காலம் மட்டுமே உள்ளதால் மீதமுள்ள பாடத்தை பள்ளி ஆசிரியர்கள் நடத்துவதற்கு எளிமையாகவும், அதை நாங்கள் புரிந்து கொண்டு படிப்பதற்கு எளிதாகவும் இருக்கும். இதன் காரணமாக நடக்க உள்ள அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இவை பெரிய அளவில் உதவும். தமிழக அரசு அறிவித்த இந்த பாட குறைப்பை முழு மனதாக வரவேற்கிறேன்.
ரேஷ்மா (அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவி):- ஏற்கனவே ஆன்லைனில் ஆசிரியர்கள் மூலம் படித்த பாடங்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொண்ட நிலையில் தற்போது பாடம் குறைப்பு என்பது மாணவர்களான எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் அனைத்து மாணவர்களும் குறைந்த காலக்கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இது காரணமாக இருக்கும். இதுதவிர ஆசிரியர்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் மனநிறைவோடு பாடத்தை நடத்துவதற்கும் இவை பெரும் உதவியாக இருக்கும்.
சிவகங்கையை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் கூறும் போது, தற்போது அரசு பிளஸ்-2 பாடங்களை குறைக்க உத்தரவிட்டு உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். குறைக்கப்பட்ட பாடத்தை இனி வரும் காலங்களில் நன்றாக படித்து அதிக மதிப்ெபண் பெறுவதற்கு உதவும். ஆசிரியர்களும் குறைக்கப்பட்ட பாடத்தை விரைவாக கற்று கொடுப்பார்கள் என்றனர்.
Related Tags :
Next Story