கடந்த ஆண்டு விபத்துகளில் 219 பேர் பலி - கலெக்டர் தகவல்


கடந்த ஆண்டு விபத்துகளில் 219 பேர் பலி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2021 9:50 PM IST (Updated: 19 Jan 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விபத்துகளில் 219 பேர் பலியாகி உள்ளதாக சாலை பாதுகாப்பு விழாவில் கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் போக்குவரத்து துறை சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு விழா தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது வரவேற்று பேசினார். விழாவில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு விலையில்லா தலைக்கவசங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விழாவை அடுத்த மாதம் 17-ந் தேதி வரை ஒரு மாத காலம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு அவசியம். 18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை ஓட்ட வேண்டும்.

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்பு போன்ற வருந்ததக்க சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆண்டு மாவட்டத்தில் மொத்தம் 1022 சாலை விபத்துகள் நடந்துள்ளது. அதில் 206 விபத்துகளில் 219 பேர் பலியாகி உள்ளனர். 816 விபத்துகளில் ஆயிரத்து 113 பேர் காயமடைந்துள்ளனர். இதுபோன்ற நிலையை தவிர்த்து 100 சதவீதம் சாலை விபத்துகள் இல்லாத மாவட்டம் என்ற நிலையினை அடைந்திடும் வகையில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களும் சாலை விதிமுறைகளை முறையே பின்பற்றி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

Next Story