எடியூரப்பா மீது அதிருப்தி இல்லை, மந்திரி பதவி கிடைக்காதது வேதனை அளிக்கிறது; ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பேட்டி


ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ
x
ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ
தினத்தந்தி 19 Jan 2021 8:30 PM GMT (Updated: 19 Jan 2021 5:30 PM GMT)

மந்திரி பதவி கிடைக்காதது வேதனை அளிப்பதாகவும், முதல்-மந்திரி எடியூரப்பா மீது அதிருப்தி இல்லை என்றும் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ரேணுகாச்சார்யா
கர்நாடகத்தில் கடந்த 13-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது மந்திரிபதவியை எதிர்பார்த்து காத்திருந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வுக்கு பதவி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் டெல்லிக்கு சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து புகார் அளித்தார். இந்த நிலையில், மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தி அடைந்தவர்கள் டெல்லிக்கு வரும்படி மத்திய உள்துறை மந்திாி அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 2-வது முறையாக நேற்று ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரி பதவி கிடைக்காதது குறித்தும், யோகேஷ்வருக்கு மந்திரி பதவி கொடுத்திருப்பது குறித்தும் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

வேதனை அளிக்கிறது
மந்திரி பதவி கிடைக்காததால் பா.ஜனதாவின் அதிருப்தி எம்.எல்.ஏ. நான் இல்லை. முதல்-மந்திரி எடியூரப்பா மீதும் எனக்கு அதிருப்தி இல்லை. இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் நான் செய்த தவறுகளை தற்போது செய்ய விரும்பவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா என்னுடைய அரசியல் குரு. அவர் தான் என்னை கட்சிக்கு அழைத்து வந்து, மந்திரி பதவி கொடுத்தார். டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க போகிறேன், அவர்களுடன் எதுபற்றி பேசினேன் என்பது குறித்து பகிரங்கமாக தெரிவிக்க இயலாது. மாநிலத்தில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும். மாநிலம் வளர்ச்சி அடைவதுடன், மக்கள் நல பணிகள் நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.

யோகேஷ்வருக்கு மந்திரி பதவி கொடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இந்த ஆட்சி அமைய அவரே காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மந்திரி பதவியில் இருந்து யோகேஷ்வரை நீக்கும்படி கட்சி மேலிட தலைவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்ட எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக எச்.விஸ்வநாத், பசனகவுடா பட்டீல் எத்னால் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொண்டு நான் பேசவில்லை. எனக்கு மந்திரி பதவி 
கிடைக்காதது வேதனை அளிக்கிறது. அதுபற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story