தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி


கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார்
x
கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார்
தினத்தந்தி 20 Jan 2021 2:30 AM IST (Updated: 19 Jan 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் நேற்று பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பாதிப்பு ஏற்படாத வண்ணம்...

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் இந்த ஆண்டு குறைந்த அளவே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வது இன்னும் ஆலோசனையில் தான் இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு கல்வித்துறை கமிஷனர், அதிகாரிகள், பெற்றோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் இன்னும் எனது கைக்கு கிடைக்கவில்லை. என்றாலும், இந்த ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில் பெற்றோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பஸ் வசதி செய்து கொடுக்கப்படும்

தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் வகையிலும், மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணமும் கட்டணம் நிர்ணயம் செய்யும் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பஸ்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் வருகின்றன. மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காக பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், பள்ளிகளை புனரமைக்கவும் தேவையான நிதி ஒதுக்கப்படும். தற்போது மாநிலத்தில் பல பகுதிகளில் பள்ளிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story