வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் -கடையடைப்பு


வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் -கடையடைப்பு
x
தினத்தந்தி 19 Jan 2021 11:27 PM IST (Updated: 19 Jan 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

காங்கேயம், 

வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக காங்கேயம், வெள்ளகோவிலில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். 

உண்ணாவிரதம்

பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை முறையாக விடாமல் பி.ஏ.பி. நிர்வாகம் விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும்,  இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் விவசாயிகள் முறையிட்டும், போராட்டமும் நடத்தியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 

 உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை தாங்கி  பேசியதாவது:-

சமச்சீர் பாசனம் என்று பெயரளவில் வைத்துக்கொண்டு, நமது கிளை வாய்க்காலுக்கு தேவையான தண்ணீரை பி.ஏ.பி. நிர்வாகம் கொடுப்பதில்லை. அவர்கள் நமக்குத் தேவையான தண்ணீரையும் அணையில் இருந்து எடுக்கிறார்கள். ஆனால், அதை நமது பாசனத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதில்லை. இந்தத் தண்ணீர் இடையிலேயே முறைகேடாக வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே, பி.ஏ.பி. பாசன தண்ணீர் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடைமடைப் பகுதியான வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளுக்கு உரிய தண்ணீரை முறையாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கடையடைப்பு 

விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நேற்று காங்கேயத்தில் கடையடைப்பு நடைபெற்றது. இதன் காரணமாக, காங்கேயம் பகுதியில் மெயின்ரோடு, திருப்பூர் ரோடு, சென்னிமலை ரோடு, கரூர் ரோடு, தாராபுரம் ரோடு, கோவை ரோடு, சென்னிமலை ரோடு மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், எலெக்ட்ரிக் கடைகள், ஜவுளிக் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 

இதனால் காங்கேயம் கடைவீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. வங்கிகள், பள்ளிகள், பெட்ரோல் பங்குகள், மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையம், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. இதே போல் வெள்ளகோவிலில் விவசாயிகளுக்கு ஆதரவாக  வியாபாரிகள் கடையடைப்பு செய்திருந்தனர். பால், மருந்துக்கடை, பெட்ரோல் பங்க், அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

Next Story