தாம்பரத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் தங்கம்-வெள்ளி கொள்ளை
தாம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் தங்கம், வெள்ளியை கொள்ளையடித்து சென்றனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்
மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் உள்ள ஸ்ரீசாய்நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வருபவர் ரவி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10 தினங்களுக்கு முன்பு, தனது மனைவியின் சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அக்கம்பக்கதினர், வீட்டின் உரிமையாளருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
தங்கள்-வெள்ளி கொள்ளைஅப்போது, வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு, நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி, எல்.சி.டி. டிவி, லேப்டாப், அரிசி, மளிகை சாமன், பித்தளை பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.