ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஆண்டுதோறும் கருமேனி ஆற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் அணை
x
ஸ்ரீவைகுண்டம் அணை

உடன்குடி வட்டார பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்க ஆண்டுதோறும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை கருமேனி ஆற்றுக்கு திறந்துவிட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தாங்கைகுளம் கருமேனி ஆறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்ைக மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர்

திருச்செந்தூர் தாலுகா உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையநேரிகுளம், தாங்கைகுளம், கல்லாநேரி, புல்லாநேரி, அம்பாள் குளம் ஆகிய 5 குளங்கள் மற்றும் கருமேனிஆறு ஆகியவற்றை நம்பி சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வாழை, நெல், முருங்கை, தென்னை, பனை உள்பட பல்வேறு விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மழை காலங்களில் பலஆயிரம் கன அடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக கடலுக்கு வீணாக செல்கிறது.

நிரந்தர அரசு ஆணை

இந்த தண்ணீரை உடன்குடி வட்டார பகுதியில் உள்ள 5 குளங்கள் மற்றும் கருமேனி ஆற்றுக்கு ஆண்டுதோறும் விடுவதற்கு நிரந்தரமாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் புதிதாக அனல்மின்நிலையம், ராக்கெட் ஏவுதளம் போன்றவை உருவாக உள்ளது. இதனால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆண்டுதோறும் தண்ணீர் விட வேண்டும்.

மேலும் கருமேனி ஆற்றில் தண்ணீர் வந்தால் அதில் உள்ள ஏராளமான தடுப்பு அணைகளில் தண்ணீர் தேங்கி நின்று வழிநெடுகிலும் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். எனவே, 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்க ஆண்டுதோறும் உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், மற்றும் கருமேனி ஆறு ஆகியவற்றை முழுமையாக நிரப்ப தண்ணீர் விட வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story