நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிக்கூடம் திறப்பால் மகிழ்ச்சி: ஈரோடு ஆசிரியர்கள்-மாணவர்கள் கருத்து
ஆன்லைன் வகுப்புகளை விட பள்ளிக்கூட வகுப்பறைகளில்தான் கற்றல்-கற்பித்தல் சிறப்பாக இருக்கும் என்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் திறந்த நிலையில் ஈரோடு ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஈரோடு,
தமிழகம் முழுவதும் 10-வது மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் என அனைத்து வகை பள்ளிக்கூடங்களும் திறந்தன.
கொரோனாவால் ஆன்லைன் வகுப்புகள் என்ற மின்னணு வகுப்புக்குள் முடங்கிக்கிடந்த ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் நேற்று உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர். மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் நிறைந்த இந்த பள்ளி திறப்பு குறித்து ஈரோடு மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் கருத்துகள் வருமாறு:-
மாணவி எஸ்.கனிஷ்கா:
நான் செங்குந்தர் மகளிர் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். கொரோனா விடுமுறையால் இந்த ஆண்டு படிக்க முடியுமா? என்ற அச்சம் இருந்தது. அப்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று எங்கள் ஆசிரியைகள் தெரிவித்தனர். அதன்படி வகுப்புகள் நடந்தன. தினசரி சரியான நேரத்தில் ஆசிரியைகள் பாடம் எடுத்தனர். ஆனால், எங்களில் பலருக்கு நல்ல வேகமாக இன்டர்நெட் கிடைக்கும் செல்போன்கள் கிடையாது. எனவே பாடம் பாதி புரிந்தும், புரியாமலும் இருந்தது. தற்போது பள்ளி திறந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. வகுப்பறையில் ஆசிரியைகள் பேசும்போது கிடைக்கும் தெளிவு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை. ஆன்லைன் வகுப்பை விட நேரடி வகுப்பறைகள்தான் படிப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது.
மாணவர் நவீன்குமார்:
நான் மீனாட்சி சுந்தரனார் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பில் படித்து வருகிறேன். இந்த ஆண்டு இனி வகுப்புகள் இருக்காது என்று நினைத்தேன். ஆன்லைன் வகுப்புகளில் சரியாக பாடம் கவனிக்க முடியாது. ஆனால், பள்ளிக்கு செல்லும் சிரமம் இருக்காது. இப்போது பள்ளி திறக்கப்பட்டதால், எனது அம்மாவும், அப்பாவும் பள்ளிக்கூடம் செல்ல கட்டாயப்படுத்தியதால் பள்ளிக்கூடத்துக்கு வந்தேன்.
ஆசிரியர்கள் எங்களிடம் அன்பாக பேசி, கொரானா காலத்தில் நாங்கள் எப்படி படித்தோம். இனி எப்படி படிக்க வேண்டும் என்று கேட்டார்கள். இப்படி ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுடன் பேச முடியாது. எனவே இனி பள்ளிக்கு செல்வதுதான் நல்லது என்று முடிவு செய்து இருக்கிறேன்.
மாணவர் சூரியபிரகாஷ்:
நான் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்து வருகிறேன். ஆன்லைன் வகுப்புகள் பெயரளவுக்குதான் நடக்கும். பாதி விஷயம் புரியாது. என்ன செய்வது என்று புரியாமல் இருந்தோம்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கூடத்துக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடந்தால் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும்.
திண்டல் பி.வி.பி பள்ளிக்கூட முதல்வர் குருசடி சேவியர்:
பள்ளிக்கூடம் திறப்பு என்பது எப்போதும் மகிழ்ச்சிக்கு உரியதாகவே இருக்கும். ஒரு ஆசிரியராக இருந்தால் அதை முழுமையாக உணரலாம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் எங்கள் பிள்ளைகள் எங்களிடம் வந்திருக்கிறார்கள். ஆனால் மிகவும் கவனமாக முகக்கவசம், சானிடைசர், இடைவெளி என்று இந்த வரவேற்பு சற்று வித்தியாசமாகவே இருந்தது. மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் வருவது எத்தனை மகிழ்ச்சி என்பதையும் இன்று உணர்ந்துகொண்டோம்.
ஆசிரியை கே.வெண்ணிலா (பாரதி வித்யா பவன்) :
நான் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறேன். கொரோனா காலத்தில் வகுப்புகள் இல்லை என்றபோது எங்கள் குழந்தைகள் படிப்பும் இருண்டு விடுமோ? என்று அச்சத்தில் இருந்தபோது, ஆன்லைன் வகுப்புகள் கைகொடுத்தன. எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆன்லைன் வகுப்புகள் நன்றாகவே நடந்தது. ஆனால் இதே வாய்ப்புகள் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கிடைத்திருக்குமா? என்றால் நிச்சயமாக இருக்காது. எனவே வகுப்பறை பாடம்தான் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் ஏற்றது. இந்த நிலைமை சீராகும் என்று நம்புகிறோம்.
ஆசிரியர் சி.பிரேமசீலன் (பாரதி வித்யா பவன்):
நான் பிளஸ்-2 ஆசிரியராக இருக்கிறேன். ஆன்லைன் வகுப்புகள் மூலம் அனைத்து பாடங்களும் முடிக்கப்பட்டு விட்டன. இனிமேல் தொடர் தேர்வுகள் மூலம் மாணவ-மாணவிகளை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். அரசு பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கு கொள்ள முடியாத மாணவ-மாணவிகள் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த கால அவகாசம் போதுமானதாக இருக்காது. அரசு பாடங்களை குறைத்து உள்ளது. அதில் எளிதாக படித்து அதிகம் மதிப்பெண்கள் பெறும் பகுதிகள் குறைக்கப்பட்டு இருப்பதால் சற்று சிரமமான சூழல் உள்ளது. இப்போது படிக்க வேண்டிய பாடங்களை நன்றாக படிப்பதுதான் மேல் படிப்புக்கு அடித்தளம். எனவே எதையும் விட்டு விட முடியாது. எனவே பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு கால அவகாசம் அதிகமாக கொடுக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பை விட நேரடி வகுப்புகளில்தான் மாணவர்கள் புரியும்படி சொல்லிக்கொடுக்க முடியும்.
Related Tags :
Next Story