குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்கக்கோரி பவானிசாகர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்
குடிநீர் வழங்கக்கோரி பவானிசாகர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம் முறையாக...
பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி குமரன் நகர். இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. இதில் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அங்குள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அங்குள்ளவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குமரன் நகரில் உள்ள 76 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாகவும் மற்ற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் அங்குள்ள சத்தியமங்கலம்- கொத்தமங்கலம் சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி மைதிலி, கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பவானிசாகர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story