திருச்சி அருகே சிறுகனூரில் தி.மு.க. மாநாட்டு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
திருச்சி அருகே சிறுகனூரில் தி.மு.க. மாநில மாநாட்டு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆலோசனை செய்தார்.
திருச்சி:
திருச்சி அருகே சிறுகனூரில் தி.மு.க. மாநில மாநாட்டு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆலோசனை செய்தார்.
தி.மு.க. மாநில மாநாடு
தி.மு.க.வின் 11-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என சமீபத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக திருச்சியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சுமார் 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்து சமன்படுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பணிகளை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லில் மக்கள் கிராமசபை கூட்டத்தை முடித்து கொண்டு, அங்கிருந்து காரில் நேற்று பகல் 2.25 மணி அளவில் சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
அங்கு மாநாட்டு திடலில் குவிந்து இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஸ்டாலினை கண்டதும் உற்சாகத்துடன் கையசைத்தனர். சிறிதுதூரம் காரிலேயே மாநாட்டு திடலை பார்வையிட்டபடி வந்த ஸ்டாலின் திடீரென காரில் இருந்து கீழே இறங்கினார்.
இதை கண்டு தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர் மாநாட்டு திடலில் நடந்து சென்று, மாநாட்டின் முகப்பு பகுதி அமையும் இடம், மேடை அமையும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
ஆலோசனை
அப்போது அவர் மாநாடு நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பார்த்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு பகல் 2.40 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., அன்பில்மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். திருச்சியில் ஏற்கனவே கடந்த 1996, 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்தில் மீண்டும் மாநில மாநாடு நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
Related Tags :
Next Story