10 மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் - சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்


10 மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்புகள் தொடக்கம் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் - சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 20 Jan 2021 3:30 PM IST (Updated: 20 Jan 2021 3:30 PM IST)
t-max-icont-min-icon

10 மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் மாணவர்கள் வந்தனர். சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பல்வேறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து அரசு வழிக்காட்டுதலின் பேரில் பெற்றோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதற்கென பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 542 பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என சுமார் 62 ஆயிரத்து 987 பேர் உள்ளனர்.

பல மாதங்களாக பூட்டியே கிடந்த பள்ளிகள் தூய்மைப்படுத்துதல், சுத்தமான குடிநீர் வழங்க தொட்டிகள் சுத்தம் செய்தல், இருக்கைகள் மற்றும் சுற்றுபுறப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்ட பின்னரே வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு வகுப்பறையில் 20 முதல் 25 மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

முதல் நாளான நேற்று பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலமும், தன்னார்வலர்கள் மூலமும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்று நேரில் ஆய்வு செய்தனர்.

பள்ளியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை கண்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விடுமுறை நாட்களில் நடந்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகளை சக மாணவ, மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

ஆரணி கல்வி மாவட்டத்தில் ஆரணி, மேற்கு ஆரணி, பெரணமல்லூர், தெள்ளார் ஆகிய வட்டாரத்தில் அரசு, தனியார் மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் உள்ளன. பல மாதங்களாக பூட்டியே கிடந்த அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ - மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சீருடை அணிந்து அரசு பஸ்சில் பயணித்தால் பஸ் பாஸ் தேவையில்லை, ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவிகள் மட்டுமே அமர வேண்டும் என்றார்.

அப்போது ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன், பள்ளி ஆய்வாளர் பாபு மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.

கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 294 மாணவர்களும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 341 மாணவிகளும் நேற்று பள்ளிக்கு வந்தனர். ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் வீதம் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். இதில், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நுழைவு வாயிலில் மாணவிகளுக்கு வெப்பநிலை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களையும் பள்ளியில் வரிசையில் நிற்க வைத்து கிருமி நாசினி வழங்கி தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தனர்.

ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் 168 மாணவ- மாணவிகள், 10-ம் வகுப்பில் 147 மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலிலேயே கிருமி நாசினி மூலம் கைகழுவி, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் நந்தகுமார் வரவேற்றார்.

மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தனர்.

போளூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், மாணவிகளிடம், விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும். தொட்டு பேசுதல், கை குலுக்குதல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். வீட்டிலிருந்து கொண்டு வரும் குடிநீர், மதிய உணவை பகிர்ந்து சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தினார்.

மாவட்ட முதன்மை அதிகாரி எஸ்.அருள்செல்வம், மாவட்ட கல்வி அதிகாரி கலைவாணி, ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார்.

தொடர்ந்து போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா வையொட்டி நடைப்பெற்றுவரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். தலைமையாசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் வரவேற்றார். வக்கீல் சாந்திலால் உள்ளிட்ட விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஜ்வான், ஆணையாளர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செங்கம் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ - மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story