10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு - கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ- மாணவிகளின் உடல்நிலையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
வாலாஜா,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 10 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் நேற்று 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 216 பள்ளிகள் திறக்கப்பட்டது. முன்னதாக பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி நுழைவுவாயிலில் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. அதன்பிறகு சமூக இடைவெளியுடன் அவர்கள் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு வகுப்பறையில் 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர்.
வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது பள்ளிகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு, நகராட்சி, உதவிபெறும் சுயநிதி, மெட்ரிக் என 216 பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் 15 ஆயிரத்து 916 மாணவ- மாணவிகளும், பிளஸ் -2 வகுப்பில் 13 ஆயிரத்து 351 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 267 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் 11 ஆயிரத்து 839 மாணவ- மாணவிகளும், பிளஸ்- 2 வகுப்பில் 9 ஆயிரத்து 787 மாணவ மாணவிகளும் இன்று (நேற்று) பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர்.
சுகாதாரத் துறையின் மூலம் வைட்டமின் மாத்திரைகளும், ஜிங்க் மாத்திரைகளும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் உடல் நிலையை கண்காணிக்க ஒன்றிய அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அந்த மாணவர்களை தனிமைப்படுத்தி வைப்பதோடு மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை மூலம் பள்ளிக்கு அருகில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் மற்றும் தாசில்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சோளிங்கரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல்நாளான நேற்று பத்தாம் வகுப்பு மாணவிகள் 217 பேர், 12-ம் வகுப்பு மாணவிகள் 393 பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் ஆசிரியர் நின்று கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, சானிடைசர் வழங்கினார்.
இதேபோன்று சோளிங்கர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பின்னர், அனுமதிக்கப்பட்டு போதுமான சமூக இடைவெளி விட்டு, வகுப்புகளில் அமரவைக்கப்பட்டனர். முககவசம் அணியாமல் வந்த மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
நெமிலியை அடுத்த பனப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா நோய் தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து ஆசிரியர்கள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னர் வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 10-ம் வகுப்பில் 89-சதவீத (171) மாணவிகளும், 12-ம் வகுப்பில் 77 சதவீத (185) மாணவிகளும் பள்ளிக்கு வந்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சக தோழிகளையும் பள்ளி ஆசிரியர்களையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story