கமுதியில், தரமான ரேஷன் அரிசி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கமுதியில், தரமான ரேஷன் அரிசி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2021 2:24 PM GMT (Updated: 20 Jan 2021 2:24 PM GMT)

கமுதியில் தரமான ரேஷன் அரிசி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கமுதி,

கமுதியில், 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைபேட்டை பகுதியில் உள்ள 3-ம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசியும், மற்ற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 15-ம் வார்டு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பதாரர்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர்.

இந்த வார்டில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு திரண்டு வந்து 100 கிலோவிற்கு மேலான ரேஷன் அரிசியை தரையில் கொட்டி அதனை சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தரமான அரிசியை வழங்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர். நேற்று செவ்வாய்கிழமை வாரச்சந்தை என்பதால் சந்தைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாமல் அப்பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் தென்னரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். நாங்கள் இந்த அரிசியை தான் சமைத்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் போது கெட்ட வாடை வருகிறது. மேலும் சீனி, பருப்பு போன்ற பொருள்கள் அளவு குறைவாக வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story