முதல் முறையாக நடந்த ஆலோசனை கூட்டம்: ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசின் விதிகள் மீறப்படுகின்றன - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் புகார்


முதல் முறையாக நடந்த ஆலோசனை கூட்டம்: ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசின் விதிகள் மீறப்படுகின்றன - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் புகார்
x
தினத்தந்தி 20 Jan 2021 8:00 PM IST (Updated: 20 Jan 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

மதுரை நகரில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசு விதிகள் மீறப்படுவதாக வெங்கடேசன் எம்.பி.,எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினர்.

மதுரை,

மதுரை மாநகரில் மத்திய அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 13 பணிகள் ரூ.974 கோடியே 86 லட்சம் செலவில் நடக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிப்பதற்கு மத்திய அரசு விதிகளின்படி ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. குழுவின் தலைவர் கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இணைத்தலைவர் வெங்கடேசன் எம்.பி., கன்வீனர் மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழு உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., மூர்த்தி எம்.எல்.ஏ., மாநகராட்சி நகர் பொறியாளர் அரசு, ஓய்வு பெற்ற நகர் பொறியாளர் சக்திவேல், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், கப்பலூர் தொழில் வணிக சங்கத் தலைவர் ரகுநாதராஜா, மதுரை லயன்ஸ் கிளப் பென்னிக்குயிக் தலைவர் சஞ்சய், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் வெங்கடேசன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்வதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் ஆலோசனை குழு உள்ளது. இந்த ஆலோசனைக்குழு கூட்டத்தை ஒரு ஆண்டுக்கு குறைந்தது 3 அல்லது 4 முறையாவது கூட்ட வேண்டும். ஆனால் மதுரையில் இந்த கூட்டத்தை இதுவரை ஒரு முறை கூட கூட்ட வில்லை. நாங்களாக இந்த கூட்டத்தை கூட்டுவோம் என்று அறிவித்ததால் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டியை பணியை மேற் கொள்வதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுவார். ஆனால் தமிழகத்தில் இது போன்று நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட வில்லை. இதுவே இந்த பணியினை பலவீனப்படுத்தும் செயலாகும். மத்திய அரசின் விதிகளை பின்பற்றாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதே போல் மதுரை மக்களை மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முறையற்று செயல்படுத்தப்படும் இந்த பணிகளால் சென்னையை விட காற்று மாசு மதுரையில் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பது தான் மதுரை மக்களின் விருப்பம். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் பெரியார் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கடைகள் கட்டப்படுகிறது. அதனால் அந்த பகுதியில் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே இங்கு கட்டப்படும் கடைகளை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அதே போல் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இந்த சாலைகளை மூடிய பின்பு தான் புதிதாக சாலைகளை தோண்ட வேண்டும் என்று கூறியுள்ளோம். அதே போல் அங்கு பணிகளை மொத்தமாக செய்யாமல் பகுதி, பகுதியாக நிறைவேற்ற வேண்டும். வைகை ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டம் குறித்து மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் உரிய விளக்கம் தர வில்லை. எனவே அந்த திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட வில்லை.

மாநகராட்சியின் பொது செலவில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்து நிதியை வீணடிக்கிறார்கள். ரூ.30 கோடிக்கு தெரு விளக்கு போடுவதாக கணக்கு சொல்கிறார்கள். மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் தரம் குறித்து அரசு நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். பல மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி நிதியினை 10 சதவீதம் வரை மிச்சப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் மதுரையில் நிதியை மிச்சப்படுத்த வில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த கூட்டத்தை நடத்துவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்க வில்லை. இப்போது தான் கூட்டி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- ஸ்மார்ட் சிட்டி பணி என்ற பெயரில் மதுரை மக்களை மாநகராட்சி மிகவும் துன்புறுத்துகிறது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் பணிகளை தொடங்கி மக்களை கஷ்டப்படுத்துகிறது. முதல் ஆண்டு என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் சிந்திக்கும் அளவிற்கு கூட ஸ்மார்ட் சிட்டி திட்ட என்ஜினீயர்கள் சிந்தித்து பணிகளை மேற்கொள்ள வில்லை. எனது மதுரை மத்திய சட்டசபை தொகுதி நிதியில் செய்யப்பட்ட திட்டப்பணிகளில் இதுவரை சுமார் ரூ.6 லட்சம் அரசுக்கு மிச்சப்படுத்தி கொடுத்து இருக்கிறேன். அப்படியானால் ஆயிரம் கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் பணிகளில் எவ்வளவு மிச்சப்படுத்தி இருக்கிறார்கள்?. ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு ஆயிரம் கோடி ரூபாய் பணிகளை ஒன்று அல்லது இருவர் மட்டுமே முடிவு செய்து தங்களது இஷ்டத்திற்கு செலவு செய்கிறார்கள். பணிகளை வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிந்து விடுவோம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்தவரை பணிகளை தரமாக செய்ய வேண்டும். திட்டமிட்டு செய்ய வேண்டும். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூர்த்தி எம்.எல்.ஏ. கூறும் போது, 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் விரிவாக்க பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த திட்டத்தின்படி அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்க வேண்டும். அதனை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். அதே போல் கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

Next Story