தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் - அமைச்சர் தங்கமணி பேட்டி


தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல எனக்கூறிய மு.க.ஸ்டாலினின் பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் - அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2021 8:10 PM IST (Updated: 20 Jan 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என மு.க.ஸ்டாலின் சொல்லியுள்ள பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் என அமைச்சர் தங்கமணி கூறினார். குமாரபாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமாரபாளையம்,

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல. நிலக்கரி வாங்கியதிலும், காற்றாலை மின்சாரம் வாங்கியதிலும் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது தவறான தகவல். 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின்போது தமிழ்நாட்டில் 18 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்ததை மக்கள் அறிவார்கள்.

தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி எங்கள் ஆட்சி போகபோகிறது என்றால் அது மின்சார தட்டுப்பாட்டால் தான் என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார். எனவே மு.க.ஸ்டாலின் சொல்லியுள்ள பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள். அரசியலுக்காக அவர் இப்படி சொல்கிறார்.

மின்சாரத் துறையில் ரூ.905 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை நான் தொழில்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தேன். அந்த காலகட்டத்தில் ஊழல் நடந்ததாக தவறாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை அப்போதே தமிழக அரசு மின்சாரத்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு குறித்து ஒரே மேடையில் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என முதல்-அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலின். உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுங்கள். கவர்னரிடம் கொடுத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அனுமதி கொடுங்கள் என்கிறார். கவர்னரிடம் கூறியுள்ள பொய் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும். முதல்-அமைச்சர் ஒரே மேடையில் விவாதிக்க அழைக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் விவாதத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் கிராம சபை என்ற பெயரில் இங்குள்ள தி.மு.க.வினர் தயாரித்து கொடுத்துள்ள கேள்விகளை, பெண்களை கேள்வி கேட்பது போல் இவர் பதில் சொல்வது போல் குற்றம் சாட்டுகிறார். 2015 முதல் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருவதை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவித்துள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று சொன்னது உண்மை. விசைத்தறி அதிபர்கள், சாய தொழிலதிபர்கள் அதற்கான இடத்தை வாங்கியபொழுது, தி.மு.க.வினர் தூண்டுதலால் பிரச்சினைகளை ஏற்படுத்தி வாங்கிய இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்ட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். தற்போது பொது சுத்திகரிப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 20, 25 நாட்களுக்குள் பிரதமர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

சசிகலா விடுதலைக்குப்பின் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே போய்விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். அவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இப்போது போய்விடும், அப்போது போய்விடும், இன்னும் ஒரு மாதத்தில் போய்விடும், இரண்டு மாதத்தில் போய்விடும் என்று சொன்னார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story