மாயமான முதியவரை தேடி சென்றபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது


மாயமான முதியவரை தேடி சென்றபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 20 Jan 2021 8:43 PM IST (Updated: 20 Jan 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் மாயமான முதியரை தேடி சென்றபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது.

கொள்ளிடம்,

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேலூர் கிராமம் மேலதெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிமுத்து (வயது 65) தொழிலாளி. இவர் ஆற்றின் நடுத்திட்டில் மேய்ந்து கொண்டிருந்த தனது மாடுகளை கடந்த 15-ந் தேதி மாலை வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி சென்றார். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுவரை மாயமான முதியவரின் உடல் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மாரிமுத்துவின் உடலை தேடுவதற்காக அதே மாதிரவேளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், லட்சுமணன், சங்கர் (35) ஆகியோர் நேற்று முன்தினம் ஆற்றுக்குள் இறங்கி தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சங்கர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

ராஜேஷ், லட்சுமணன் ஆகிய 2 பேரும் ஆற்றில் நீந்தி சென்று நடுப்பகுதியில் உள்ள திட்டில் கரை ஏறினர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சங்கர், முதியவர் மாரிமுத்து ஆகிய இருவரையும் கொள்ளிடம் போலீசார், சீர்காழி தீயணைப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் படகின் உதவியுடன் தேடினர்.

இந்தநிலையில் நீரில் அடித்து செல்லப்பட்ட சங்கரின் உடல் கொள்ளிடம் அருகே உள்ள கொன்னகாட்டுப்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story