விபசார புரோக்கர் கொலை: மதுரை லாரி டிரைவர் கைது - பரபரப்பு வாக்குமூலம்


விபசார புரோக்கர் கொலை: மதுரை லாரி டிரைவர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 20 Jan 2021 8:45 PM IST (Updated: 20 Jan 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே விபசார புரோக்கர் கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் போலுப்பள்ளி அருகில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு விபசார தொழில் செய்து வந்தார். தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). விபசார புரோக்கர்.கடந்த 17-ந் தேதி இவர்கள் 2 பேரும் போலுப்பள்ளி அருகே நின்து அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரை உல்லாசத்திற்கு அழைத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் இரும்பு கம்பியால் வெங்கடேசனையும், அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கி விட்டு சென்று விட்டார். இதில் வெங்கடேசன் இறந்தார். அந்த பெண் படுகாயம் அடைந்தார்.

இந்த கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து, தேனி சாலையைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்குமார் (32) என்பவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். கடந்த 17-ந் தேதி நான் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் லாரியை ஓட்டிச் சென்றேன். அப்போது போலுப்பள்ளி அருகே சாலையோரமாக ஒரு பெண்ணும், ஒரு ஆணும் டார்ச்லைட் அடித்தபடி லாரியை நிறுத்தினர். நானும் லாரியை நிறுத்தினேன். அப்போது அந்த பெண் என்னை உல்லாசமாக இருக்க அழைத்தார்.

அப்போது அவருடன் இருந்த நபர் ரூ.200 கொடுத்தால் இவளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். உடனே நானும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்து அந்த பெண்ணிடம் ரூ.200 கொடுத்து விட்டு அவரை அங்குள்ள மறைவிடத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு உல்லாசமாக இருந்த போது அந்த பெண் என்னை பிடித்து தள்ளினாள். என்னிடம் பணமும் வாங்கி விட்டு உல்லாசமாக இருக்க மறுத்ததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

உடனடியாக நான் அவள் கையில் வைத்திருந்த ரூ.200-ஐ பறிக்க முயன்றேன். அப்போது அந்த பெண் கூச்சல் போட்டார். இதனால் அவளுடன் இருந்த புரோக்கர் வெங்கடேசன் அங்கு கூச்சலிட்டபடி ஓடி வந்தார். இதனால் செய்வதறியாமல் திகைத்து போன நான் லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த பெண்ணையும், வெங்கடேசனையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.

ஏற்கனவே இதேபோல நான் சென்ற போது விபசார அழகி ஒருவர் கூச்சலிட்டு அவருடன் வந்தவர்கள் என்னை அடித்து பணத்தை பறித்து விட்டனர். அதே போல ஒரு சம்பவம் தற்போதும் நடந்து விடக்கூடாது என நான் அவர்களை இரும்பு கம்பியால் அடித்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைதான லாரி டிரைவர் சுரேஷ்குமாரிடம் குருபரப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story