திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
தேனி அருகே நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செம்பட்டி,
தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் இ்ன்று (புதன்கிழமை) அரண்மனைபுதூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திண்டுக்கல் வழியாக தேனிக்கு காரில் சென்றார்.
முன்னதாக அவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் வழிநெடுகிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூரில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் அவர், அய்யலூர்-கடவூர் பிரிவில் காரில் இருந்தவாறு தி.மு.க. கொடியை ஏற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் சக்கரபாணி எம்.எல்.ஏ. (மேற்கு), செந்தில்குமார் எம்.எல்.ஏ. (கிழக்கு), தலைமை செயற்குழு உறுப்பினர் காந்திராஜன், ஒன்றிய செயலாளர்கள் வீராசாமிநாதன் (வேடசந்தூர்), சுப்பையன் (வடமதுரை), நகர செயலாளர்கள் கருப்பன், கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வக்கம்பட்டியில், ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் செம்பட்டி நால் ரோட்டில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் வத்தலக்்குண்டு காளியம்மன் கோவில் அருகே மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இன்னும் 4 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கமிஷன், கலெக்சன் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற சட்டமன்ற ே்்தர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் என்றார்.
இதையடுத்து அவர் தேனி நோக்கி சென்றார். அப்போது தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியகுளத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து, "எனக்கு வரவேற்பு கொடுத்த உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கமிஷன், கலெக்சன் ஆட்சியான எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட நான் தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா?" என்று பேசினார். அப்போது தொண்டர்கள், "நாங்களும் தயார்" என கோஷம் எழுப்பினர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர், மு.க.ஸ்டாலின் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கினார்.
Related Tags :
Next Story