10 மாதங்களுக்கு பிறகு திறப்பு: பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்


10 மாதங்களுக்கு பிறகு திறப்பு: பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 20 Jan 2021 9:14 PM IST (Updated: 20 Jan 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

தேனி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா வைரசின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளிகள் திறப்பது தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பல்வேறு கட்ட ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் பெற்றோரிடம் நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களை தொடர்ந்து 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி 10 மாதங்களுக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் 71 உயர்நிலைப்பள்ளிகள், 147 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கிருமி நாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு நுழைவு வாயிலில் வரவேற்பு கொடுத்து சமூக இடைவெளியுடன் வகுப்பறைகளில் அமர வைத்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அவர்களுடன் பெற்றோரும் வந்திருந்தனர். அப்போது பெற்றோரிடம் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப சம்மதம் தெரிவித்து இசைவு கடிதம் பெறப்பட்டது. பெற்றோரை அழைத்து வராத மாணவ-மாணவிகளை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பெற்றோர்களை வரவழைத்து இசைவு கடிதம் பெறும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவ-மாணவிகளே பள்ளிகளுக்கு வந்தனர். முதல் நாளில் பாடம் நடத்தப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, பஸ்களில் வருவதை தவிர்த்து சைக்கிள்களில் வருவதை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அருள் முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story