மசினகுடி பகுதியில், காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சாவு - சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றபோது உயிரிழந்த பரிதாபம்


மசினகுடி பகுதியில், காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சாவு - சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றபோது உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 20 Jan 2021 9:47 PM IST (Updated: 20 Jan 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றபோது பரிதாபமாக இறந்தது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளிமண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காயத்துடன் 40 வயதான ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. மேலும் பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார், தொட்டிலிங் உள்ளிட்ட கிராம பகுதிக்குள் முகாமிட்டு வந்தது. இந்த காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து காட்டு யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

தொடர்ந்து காட்டு யானையை கண்காணித்து பழங்களில் மருந்து, மாத்திரைகளை மறைத்து வைத்து தினமும் வழங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு காட்டு யானையின் இடது காதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் காயமடைந்த காதின் ஒரு பகுதி சதை துண்டாகி கீழே விழுந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதில் காட்டு யானையின் தலைப்பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மசினகுடி- சிங்காரா செல்லும் சாலையோரம் சுமார் 200 மீட்டர் தொலைவில் நின்றிருந்த காட்டு யானைக்கு வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து காட்டு யானையை பிடித்து முதுமலை தெப்பக்காடு முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு காட்டு யானையை கண்காணித்து வந்தனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசிம், விஜய், கிரி, கிருஷ்ணன் ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக (வெளி மண்டலம்) துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனச்சரகர் காந்தன், மாரியப்பன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை பிடிக்கும் பணியில் நேற்று காலை ஈடுபட்டனர்.

அப்போது கோவை வன கால்நடை டாக்டர் சுகுமாரன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்பட மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதைத்தொடர்ந்து காட்டு யானை சற்று நேரத்தில் மயக்கமடைந்தது. இந்த நேரத்தில் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையின் கால்களை கயிறுகளால் கட்டினர். அப்போது திடீரென காட்டு யானை மயங்கி கீழே விழுந்தது.

இதைக்கண்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காட்டு யானையின் மயக்கத்தை தெளிய வைப்பதற்கான ஊசியும் போடப்பட்டது. மேலும் காட்டு யானையின் உடல் மீது வனத்துறையினர் தண்ணீரை ஊற்றி மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கும்கி யானைகள் மூலம் காட்டு யானையை தூக்கி நிறுத்த முன்றனர்.

பின்னர் காட்டு யானை எழுந்தது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை லாரியில் வனத்துறையினர் ஏற்றினர். தொடர்ந்து மரக்கட்டைகளை கொண்டு பாதுகாப்பாக லாரியில் யானையை அடைத்தனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும்போது, காட்டு யானையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. நாளைக்கு (இன்று) உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றார்.

Next Story