திருப்பூரில் பரிதாப சம்பவம்: தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை - பள்ளி செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்


திருப்பூரில் பரிதாப சம்பவம்: தாயாருடன் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை - பள்ளி செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 20 Jan 2021 10:19 PM IST (Updated: 20 Jan 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மாணவி பள்ளி செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மாணவியும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம்,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் நாட்டரசன் (வயது 40). இவருடைய மனைவி மலர்கொடி (38). இவர்களது மகன் அபினேஷ் (19), மகள் பிரியதர்ஷினி (17). நாட்டரசன் தனது குடும்பத்துடன் திருப்பூர் பெரியார்காலனி கருப்பராயன் கோவில் வீதியில் வசித்து வருகிறார். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். பிரியதர்ஷினி அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இதற்கிடையில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தனது மகளை பள்ளிக்கு செல்லுமாறு கூறி விட்டு, வழக்கம் போல் நாட்டரசன் வேலைக்கு சென்று விட்டார். அதன்பின்னர் தாயும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மலர்கொடி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

தனது தாயார் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி இது குறித்து தனது தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் உடனடியாக வீட்டிற்கு வந்தார். அப்போது மாணவி பிரியதர்ஷினியும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் பதறித்துடித்த நாட்டரசன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது மலர்கொடி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து மயக்க நிலையில் இருந்த பிரியதர்ஷினியை மட்டும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து, தாய்-மகள் உடலை பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை அறைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மலர்கொடிக்கும், அவருடைய மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் நேற்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த பள்ளிகள் திறந்த நிலையில், மாணவி பிரியதர்ஷினியை பள்ளிக்கு செல்லுமாறு அவருடைய தாயார் கூறியுள்ளார். ஆனால் பிரியதர்ஷினி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதனால் தாய், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மலர்கொடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், அதை தொடர்ந்து பிரியதர்ஷினியும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story