வாலிபர் காரில் கடத்தி கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி:போலீஸ் வலைவீச்சு


வாலிபர் காரில் கடத்தி கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி:போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jan 2021 3:30 AM IST (Updated: 20 Jan 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே கள்ளக்காதலை கைவிடாததால் வாலிபரை காரில் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் ஹரி. இவருடைய மகன் ஸ்ரீகாந்த் (வயது 21). இவர் ஓசூர் முனீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 
இந்தநிலையில் நேற்று காலை ஓசூரில் இருந்த ஸ்ரீகாந்தை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தினர். ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி வழியாக சின்னகொத்தூர் செல்லும் சாலையில் பந்தலூர் பகுதிக்கு வந்தனர்.

அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஸ்ரீகாந்தை தாக்கிய அந்த கும்பல், அவரது கழுத்தை கத்தியால் அறுத்தனர். இதையடுத்து ஸ்ரீகாந்தை அங்கேயே விட்டு விட்டு கும்பலை சேர்ந்தவர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஸ்ரீகாந்த் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஸ்ரீகாந்தை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

அதில், ஓசூரில் ஸ்ரீகாந்த் வேலை செய்த கறிக்கடையின் உரிமையாளர் பைரோஸ் என்பவரின் மனைவிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த பைரோஸ், ஸ்ரீகாந்தை பலமுறை கண்டித்தும் கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை. 

எனவே இதுகுறித்து ஏற்கனவே மத்திகிரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு  சமாதானம் ஆகினர். ஆனால் கள்ளக்காதலை கைவிடாமல் ஸ்ரீகாந்த் உறவை நீடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைரோஸ் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்ரீகாந்தை காரில் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story