மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 20 Jan 2021 5:58 PM GMT (Updated: 20 Jan 2021 5:58 PM GMT)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்-1 முத்துநகரை சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துமாலை என்ற அனுஷியா என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கணவர் கருப்பசாமியிடம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஞானேசுவரன், உதவி செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி பொறியாளர் அந்தோணிஜோசப், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

பரிந்துரை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தாழ்வான பல்வேறு பகுதியில் மழை நீர் அதிக அளவு தேங்கியது. மேலும் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ள நீர் வந்தது. இதன் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதியில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டது. இதனால் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தோம். இந்த நேரத்தில் துரதிருஷ்டவசமாக முத்துமாலை என்ற அனுஷியா என்ற பெண் மின்சாரம் தாக்கி இறந்து உள்ளார்.

இதனால் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. அவரது மனைவியின் பரிசோதனை அறிக்கை பெற்ற பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிவாரண நிதி மற்றும் வேலைவாய்ப்புக்கும் பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story