உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்


உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 20 Jan 2021 7:44 PM GMT (Updated: 20 Jan 2021 7:44 PM GMT)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திசையன்விளை,

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் சிறப்பு பூஜைகள், கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், கொடிமர பீடத்தைச் சுற்றிலும் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் குழைக்காதர், பா.ஜனதா மாநில நிர்வாகி எம்.ஆர்.காந்தி, உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன் கிருபாநிதி, ராதாபுரம் ஒன்றிய பா.ஜனதா பொதுச்செயலாளர் லிங்க சித்திரை, திசையன்விளை நகர செயலாளர் ஜெகநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

Next Story