தென்காசியில் பள்ளிக்கூடங்களில் மண்டல பார்வையாளர் ஆய்வு


தென்காசியில் பள்ளிக்கூடங்களில் மண்டல பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jan 2021 8:44 PM GMT (Updated: 20 Jan 2021 8:44 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் மண்டல பார்வையாளர் ராஜேந்திரன் ஆய்வு நடத்தினார்.

தென்காசி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கூடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக மண்டல பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்ைல, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல பார்வையாளராக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கொேரானா தடுப்பு நடவடிக்கை

பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து வருகிறார்களா?, பள்ளிக்கூட நுழைவாயிலில் கைகழுவும் திரவம் வழங்கப்படுகிறதா?, சமூக இடைவெளியுடன் வகுப்பறைகளில் அமர வைக்கப்படுகிறார்களா? என்பதை ஆய்வு செய்தார். ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, இடைகால், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன், சிதம்பரநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story