விழுப்புரத்தில் பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதியும், வளர்ச்சியும் பெற்றுள்ளது அமைச்சர் பெருமிதம்


விழுப்புரத்தில் பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதியும், வளர்ச்சியும் பெற்றுள்ளது அமைச்சர் பெருமிதம்
x
தினத்தந்தி 20 Jan 2021 11:33 PM GMT (Updated: 20 Jan 2021 11:33 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதியும், வளர்ச்சியும் பெற்றுள்ளது என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் தொடக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, கண்ணன், ராஜா, எசாலம் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமை கழக பேச்சாளர்கள் போளூர் ஜெயகோவிந்தன், ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி. ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

வளர்ச்சி

இன்று யார், யாரோ எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியினர் கூட எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஏன் பிரதமர் மோடி, மு.க. ஸ்டாலின் கூட எம்.ஜி.ஆர். பாடலை பாடும் நிலைமை மாறியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். நாடு அமைதியாக இருக்கிறது. அமைதி மட்டுமல்ல மிகப்பெரிய வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது.

பொய்யான வாக்குறுதி

தி.மு.க.வினர் கூறும் பொய்யான வாக்குறுதி, கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் ஏமாறாதீர்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என தி.மு.க. சொல்லக்கூடாது. தமிழக மாணவர்கள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை கிடையாது. நீட் தேர்வை நீக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. இதற்காகத்தான் இன்று வரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு மாற்று வழியை சிந்தித்து அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றிய ஆளுமைமிக்கவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் இந்த ஆண்டு 430 மாணவர்கள், மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வை எடுக்கும் வரைதான் இந்த சிறப்பு சட்டம் செல்லும்.

குடும்ப ஆட்சி தேவையா?

மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். குடும்ப ஆட்சி தேவையா? மக்களுக்காக உழைக்கிற ஆட்சி தேவையா? என்று சிந்தியுங்கள். பதவிக்காக ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக பாடுபடுவோம், இல்லையெனில் களத்தில் நின்று மக்களுக்காக போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், விழுப்புரம் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, பேரூராட்சி செயலாளர்கள் சங்கரலிங்கம், பூர்ணராவ், வக்கீல் அணி துணை செயலாளர் வேலவன், முன்னாள் நகர செயலாளர் மந்தக்கரை ஜானகிராமன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story