பா.ஜனதா தலைவர்கள் பற்றி அவதூறாக திட்டி கோவில் உண்டியலில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு


பா.ஜனதா தலைவர்கள் பற்றி அவதூறாக திட்டி கோவில் உண்டியலில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 5:35 AM IST (Updated: 21 Jan 2021 5:35 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே பா.ஜனதா தலைவர்கள் பற்றி அவதூறாக திட்டி கோவில் உண்டியலில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்றொரு கோவிலில் புகுந்த மர்மநபர்கள் அசுத்தம் செய்துள்ளனர்.

மங்களூரு, 

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ எல்லைக்கு உட்பட்ட பேயரி ஜங்சன் பகுதியில் கொரகஜே கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் வருடாந்திர திருவிழா முடிந்து கோவில் உண்டியல் திறந்து பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் எண்ணப்பட்டது.

அப்போது கோவில் உண்டியலில் பா.ஜனதா தலைவர்களை ஆபாசமாக சித்தரித்து, தகாத வார்த்தையில் திட்டி எழுதிய கடிதங்கள் கிடைத்தன. மேலும் ஆணுறை பாக்கெட்டுகளும் கிடந்தன. இதை பார்த்து கோவில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதுபோல் கோவில் வளாகத்திலும் பா.ஜனதா தலைவர்களை தகாதவார்த்தையில் திட்டி எழுதிய நோட்டு புத்தகங்களும் ஆங்காங்கே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் உல்லால் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கோவிலில் உண்டியலில் கிடந்த கடிதங்கள், ஆணுறைகளை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

அதேபோல் மங்களூரு அருகே உள்ள கோபால கிருஷ்ணன் கோவில் ஒன்றிலும் மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் இரவு உள்ளே நுழைந்து கோவிலில் சில இடங்களில் இயற்கை உபாதை கழித்து, அசுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இதற்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புனிதமான கோவிலில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே மங்களூருவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சுவர்களில் வாசகங்கள் எழுதிய சம்பவங்கள் நடந்த நிலையில், தற்போது கோவில்களை அவமதிக்கும் வகையில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருவதால், பரபரப்பும், பதற்றமும் நீடிக்கிறது. இதனால் மங்களூருவில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story