பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம்: ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவன் தற்கொலை


பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம்: ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2021 6:20 AM IST (Updated: 21 Jan 2021 6:20 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம் அடைந்து ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு,

ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆர்.எஸ்.தம்பி. இவர் முன்னாள் ஆவின் தலைவர். மேலும் இவர் நிதிநிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய மகன் சக்தி தருண் (வயது 17) . இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

ஆர்.எஸ்.தம்பி மற்றும் அவருடைய மனைவி இருவரும் நேற்று முன்தினம் காலை ஒரு வழக்கு விசாரணைக்காக ஈரோடு கோர்ட்டுக்கு சென்று விட்டனர். சக்தி தருண் மட்டும் ஆன்லைன் வகுப்பிற்காக வீட்டிலேயே இருந்துள்ளார். கோர்ட்டுக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் மதியம் வீடு திரும்பினார்கள்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் சக்தி தருண் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்.எஸ்.தம்பி வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது சக்தி தருண் மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியபடி இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று, மகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்தி தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அச்சம்

சக்தி தருண் தூக்குப்போடுவதற்கு முன்பாக தனது தாய், தந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது தந்தையை வீடியோ காலில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் கோர்ட்டில் உள்ளதால் பேசமுடியாது என்றும், வெளியில் வந்ததும் பேசுகிறேன் என்றும் கூறி உள்ளார். இதன் பின்னர் தான் சக்தி தருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை நினைத்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது தொடர்பாக ஆர்.எஸ்.தம்பி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ‘தனது மகன் என்னிடம் ஆன்லைன் வகுப்பு சரிவர புரியவில்லை எனவும், மன உளைச்சலாக உள்ளது எனவும் சில தினங்களாக கூறி வந்தான். மேலும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் அறிவிப்பினை கேட்டதில் இருந்து புலம்பி வந்ததாகவும், அந்த அச்சம் காரணமாக தனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story