கடனுக்கு வாங்கிய கார்களை விற்று மோசடி செய்த கும்பல் கைது ரூ.6 கோடி சொகுசு கார்கள் பறிமுதல்
கடனுக்கு வாங்கிய கார்களை விற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 கோடி மதிப்பிலான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை குர்லா போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர், போலி ஆவணங்களை பயன்படுத்தி கடனுக்கு வாங்கிய காரை ஒரு கும்பல் அவரிடம் ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கும்பல் மும்பை மட்டுமின்றி பெங்களூரு, இந்தூர், லக்னோ உள்ளிட்ட வௌிமாநில நகரங்களிலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த கும்பல் போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி விலை உயர்ந்த கார்களை வாங்குவார்கள். பின்னர் அதை விற்று அல்லது அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.
இந்தநிலையில் போலீசார் தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மேலும் 4 பேரை கைது செய்தனர். மேலும் மோசடி கும்பலிடம் இருந்து ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், எம்.ஜி. ஹெக்டார், மினி கூப்பர் உள்ளிட்ட 6 வெளிநாட்டு ரக சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.
இதற்கிடையே மோசடி கும்பலுடன் வங்கி, நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story