ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: புதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்கள் அவதி


ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: புதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Jan 2021 7:22 AM IST (Updated: 21 Jan 2021 7:22 AM IST)
t-max-icont-min-icon

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக புதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

புதுச்சேரி, 

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணியாற்றும் ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம், பஸ் நிலையத்தில் பிச்சை எடுப்பது போன்ற போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இருந்தபோதிலும் நிரந்தர டிரைவர், கண்டக்டர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி போராட்டத்தை தொடங்கினர்.

அதிகாலை 4 மணிக்கு பணிமனையில் கூடிய அவர்கள் எந்த பஸ்களையும் வெளியில் வரவிடவில்லை. பணிமனை வாசலில் வரிசையாக அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பஸ்கள் வெளியே செல்ல முடியாததால் நிரந்தர டிரைவர், கண்டக்டர்களும் வேறுவழியின்றி பணிமனையிலேயே காத்திருந்தனர்.

இதன் காரணமாக சென்னை, காரைக்கால், சிதம்பரம் என வெளியூர்கள் மட்டுமின்றி உள்ளூரில் இயக்கப்படும் டவுண் பஸ்களும் இயக்கப்படவில்லை. மாலையில் புதுவையில் இருந்து மாகி, நாகர்கோவில், குமுளி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும் இயக்கப்படவில்லை.

அந்த பஸ்கள் அனைத்தும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த பஸ்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

புதுவை அரசு பஸ்கள் ஓடாததால் கிராமப்புற பகுதிகளில் இருந்து நகரப்பகுதிக்கு வேலைக்கு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊழியர்களின் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story