சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது நாராயணசாமி தகவல்
சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு மாதம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெறுகிறது. இது, சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சட்டசபை கேபினட் அறையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு காணொலி காட்சி மூலம் போக்குவரத்து விழாவினை தொடங்கிவைத்தார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த குறுந்தகட்டையும் (சி.டி.) வெளியிட்டார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. சாலை விதிகளை கடைபிடிக்காதது, தகுந்த பயிற்சியின்றி வாகனம் ஓட்டுவது போன்றவற்றினால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன.
புதுவையில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இதில் சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக சிக்னல்களில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் வாகனங்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது.
காலை வேளைகளில் வழுதாவூர், கிருமாம்பாக்கம், மதகடிப்பட்டு பகுதிகளில் இருந்து அதிக அளவில் வாகனங்களில் மக்கள் வேலை, அலுவலக பணிகள், பள்ளி, கல்லூரிகளுக்காக நகரப்பகுதிக்கு வருகின்றனர். அந்த சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் மரப்பாலம் வரை அதிக அளவில் நெரிசல் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். நமது போலீசாரும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 95 ஆக குறைந்துள்ளது. இது இன்னும் குறைக்கப்பட வேண்டும். புதுவை மக்கள் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதிவேகமாக செல்பவர்களால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இளைஞர்களும், மாணவர்களும் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஸ்ணியா, ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போ க்குவரத்துத்துறை செயலாளர் அசோக்குமார், ஆணையர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story