கம்பத்தில் மண்எண்ணெய் விற்பனை நிலையத்தில் பயோ மெட்ரிக் எந்திரம் கோளாறு நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்


கம்பத்தில் மண்எண்ணெய் விற்பனை நிலையத்தில் பயோ மெட்ரிக் எந்திரம் கோளாறு நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 21 Jan 2021 7:49 AM IST (Updated: 21 Jan 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் மண்எண்ணெயை விற்பனை நிலையத்தில் பயோ மெட்ரிக் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கம்பம், 

நாடு முழுவதும் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளில் ஏற்கனவே இருந்த ‘பாயின்ட் ஆப் சேல்’ எந்திரத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக கை ரேகையை பதிவு செய்யும், ‘பயோ மெட்ரிக்’ எந்திரம் வைக்கப்பட்டது.

இதனால் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைக்கு சென்று கைரேகை பதிவு செய்தால் தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இந்த திட்டத்தினை தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்எண்ணெய் விற்பனை நிலையங்களிலும் மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் செயல்படுத்தியது.

அதன்படி நேற்று காலை கம்பத்தில் உள்ள மண்எண்ணெய் விற்பனை நிலையத்தில் மண்எண்ணெய் வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 9 மணிக்கு பயோ மெட்ரிக் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எந்திரத்தில் கோளாறு சரி செய்ய முடியாததால் விற்பனை நிலையத்தில் மண்எண்ணெய் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அங்கு காத்திருந்த மக்கள் மண்எண்ணெய் வாங்காமலே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மண்எண்ணெய் வாங்க காத்திருந்து கிடைக்கவில்லை. மேலும் வேலைக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. எனவே பழைய முறைப்படி ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story