அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வலியுறுத்தல்


அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Jan 2021 7:56 AM IST (Updated: 21 Jan 2021 7:56 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் உடனடியாக தேர்தல் துறைக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு புதுச்சேரி மாவட்டத்தில் 25 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த மாற்றங்கள் உள்ளடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் பேசியதாவது:-

தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி திருத்தப்பணி நடைபெற்றுள்ளது. தேர்தல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. உடனே அந்த பகுதிகளுக்கு துறை சார்பில் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்துள்ளோம். அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக ஏதாவது புகார் தெரிவிக்க விரும்பினால் மாநில தேர்தல் அதிகாரிக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கலாம். அவை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்படி பெரும்பாலான அரசியல் கட்சிகள் இன்னும் வாக்குச்சாவடி முகவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் துறைக்கு தரவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். அதை வைத்து தான் வாக்குச்சாவடி அதிகாரிகளும், முகவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேசி வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்தால் அதை சரி செய்ய முடியும்.

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று(நேற்று) முதல் அந்தந்த தொகுதிக்குப்பட்ட வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பெயர், விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேல்முருகன், இளங்கோ, அ.தி.மு.க.வை சேர்ந்த மோகன்தாஸ், பகுஜன் சமாஜ் கட்சி பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்டு கீதநாதன், தேசியவாத காங்கிரஸ் ராஜாராம், பா.ம.க.வை சேர்ந்த சத்யநாராயணன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அர்ஜூன்சர்மா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story