ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடந்தது; மெரினாவில் 900 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு; வியாபாரிகள் போராட்டம்


ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடந்தது; மெரினாவில் 900 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு; வியாபாரிகள் போராட்டம்
x

மெரினாவில் 900 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முறை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் நடந்தது. இதனை புறக்கணித்த வியாபாரிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குலுக்கல் முறை
மெரினா கடற்கரையில் 900 கடைகள் வைக்க 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, 60 சதவீதம் கடைகள் ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கும், 40 சதவீத கடைகள் புதிதாக வைக்க விரும்புபவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து கடைகள் அமைக்க விண்ணப்பித்தவர்களில், 12 ஆயிரத்து 974 பேர் தகுதியானவர்களாக மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கடைகள் அமைக்க விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் முறை, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி தலைமையில் செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நேற்று நடந்தது. காலை 11 மணியளவில் தொடங்கிய குலுக்கல், மாலை வரை நடைபெற்றது. இந்த குலுக்கலில் வியாபாரிகள் சிலர் பங்கேற்கவில்லை.

வியாபாரிகள் போராட்டம்
மேலும், அனைத்து இடங்களும், ஏற்கனவே கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெளிப்படைத்தன்மை
சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் குலுக்கல் முறை நடைபெறுகிறது. ஏற்கனவே கடை வைத்துள்ள 1,348 பேர் விண்ணப்பித்ததில் 540 பேருக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதேபோல் புதிதாக கடை வைக்க விண்ணப்பித்த 12 ஆயிரத்து 974 பேரில் 360 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதில் யாரையும் புறக்கணிக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். வெளிப்படை தன்மையுடன் தான் குலுக்கல் நடைபெறுகிறது. குலுக்கல் நடைபெறுவது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story