தூய்மை பாரத இயக்கம் சுகாதார கையேடு - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்


தூய்மை பாரத இயக்கம் சுகாதார கையேடு - திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 21 Jan 2021 3:57 PM IST (Updated: 21 Jan 2021 3:57 PM IST)
t-max-icont-min-icon

தூய்மைப் பாரத இயக்கம் சுகாதாரக் கையேட்டை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மைப் பாரத இயக்கம் 2-ம் கட்டம் மூலமாக 860 ஊராட்சிகளிலும் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற நிலையை தக்க வைத்தல், திட, திரவக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட மிக முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு 2020-2021ம் ஆண்டு 20 ஆயிரத்து 747 தனிநபர் இல்ல கழிவறைகள் தகுதியான குடும்பங்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் அரசு மானியத்தில் கட்டி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்தத் திட்ட அடிப்படையில் 2021-ம் ஆண்டில் சுகாதார ஊக்குனர் மற்றும் தனிநபர் பயன்பெறும் வகையிலான சுகாதாரம் சார்ந்த அரசு நலத்திட்டங்களின் தொகுப்பு குறித்த தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ‘‘முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம்’’ என்ற “சுகாதார கையேடு-2021” திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி முதல் கட்டமாக திட்ட இயக்குனர், மண்டல அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கல்வி, சுகாதாரம், சமூகநலம் உள்ளிட்ட பங்கேற்புத் துறை உயர் அலுவலர்களுக்கும், முதன்மை ஊக்குனர்களுக்கும் அளிக்கப்பட்டது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 897 சுகாதார ஊக்குனர்களுக்கும் விரைவில் “சுகாதார கையேடு-2021” அளிக்கப்படும்.

இந்தக் கையேட்டில் கழிவறை பயன்பாடு மற்றும் கட்டுமானம் திட, திரவக்கழிவு மேலாண்மை, குடிநீர் மேலாண்மை, ஊட்டச்சத்து முறைகள், மாதவிடாய் சுகாதாரம், வைரஸ் தொற்றுநோய், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை தமிழகம் செயலி பயன்பாடு, ஊக்குனர் பணிகள், கிராம சபா மற்றும் அரசு துறைகளால் செயல்படுத்தப்படும் தனி நபர் பயன்பெறும் சுகாதாரம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள், மகளிர் சுய உதவிகுழுக்கள், குழந்தைகள் பாதுகாப்பு குழு போன்ற தலைப்புகளில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உடனிருந்தார்.

Next Story