பெனுமூர் அருகே, காதலியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - வீடு சூறை, மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைப்பு
பெனுமூர் அருகே காதலியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் வாலிபரின் வீட்டை உடைத்துச் சூறையாடினர். மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
சித்தூர்,
சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலம் தூர்பள்ளியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும், பூதலப்பட்டு மண்டலம் சிந்தமாகுளப்பள்ளியைச் சேர்ந்த 17 வயது வாலிபரும் காதலித்து 2 வாரங்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ‘அலைபாயுதே’ சினிமா பட பாணியில் அவர்கள் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டில் இருந்து கொண்டனர்.
இந்தநிலையில் அந்தப் பெண்ணுக்கு அவரின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது காதல் மனைவியை நேற்று முன்தினம் கத்தியால் குத்தி உள்ளார். மேலும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். ஆபத்தான நிலையில் சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதற்கிடையே, காதலியை கத்தியால் குத்தி வி்ட்டு தப்பியோடிய வாலிபர் நேற்று காலை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எனினும், ஆத்திரம் அடைந்த இளம்பெண் வீட்டார் வாலிபரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துச் சூறையாடினர். வீட்டில் இருந்த வாலிபரின் தந்தையை சரமாரியாகத் தாக்கினர். வாலிபரின் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார்சைக்கிள்களை தீ வைத்துக் எரித்தனர். மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக பெனுமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story