'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி
'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனே,
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தால், சீரம் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்தால் அந்த பகுதியே கருமண்டலமாக காட்சியளித்தது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்து கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் 'கோவிஷீல்டு' மருந்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டுள்ள இடம், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் இடம் இல்லை எனவும், தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு கிடங்குகள் பத்திரமாக உள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீவிபத்தில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா கூறுகையில்,
எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சில தலங்கள் சேதம் அடைந்துள்ளது. மற்றபடி உயிரிழப்போ அல்லது பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்து காரணமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அரசுக்கும், பொது மக்களுக்கும் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story