நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


நிறுத்தப்பட்ட உதவித்தொகையை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2021 8:12 PM IST (Updated: 21 Jan 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை உதவித்தொகையை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதந்தோறும் அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இணையதள கோளாறு, கணினி பதிவேற்ற பாதிப்பு, பணியாளர் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களினால் பலருக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த குறைபாடு சரிசெய்ததும் நிலுவையில் உள்ள உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மாதத்திற்கான (ஜனவரி) உதவித்தொகை மட்டும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் விடுபட்ட நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை வழங்கக்கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஹரிகரசுதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தை தொடர்ந்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிலுவையில் உள்ள உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story