இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் கடலில் மாயமான 4 மீனவர்களை தேடும் பணி தீவிரம் - யாழ்ப்பாணத்தில் 2 உடல்கள் ஒதுங்கியதா? என விசாரணை
இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் கடலில் மாயமான 4 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே யாழ்ப்பாணம் கடற்கரையில் 2 உடல்கள் ஒதுங்கியதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ஆரோக்கியசேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மெசியான் (வயது 28), உச்சிப்புளி அருகே வட்டவளம் நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாம் சாம்சன் (22), உச்சிப்புளி செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் கடந்த 18-ந் தேதி இரவில் நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் ஒன்று, மீன்பிடி படகு மீது மோதிவிட்டு வேகமாக சென்றுவிட்டதாக தெரியவருகிறது.
ரோந்து கப்பல் மோதியதில் படகு சேதமடைந்து, கடல்நீர் படகுக்குள் புகுந்தது. சிறிது நேரத்தில் படகு மூழ்க தொடங்கியதால் அதில் இருந்த 4 மீனவர்களும், வாக்கி டாக்கி மூலம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்டனர். ஆனால் அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் நடமாட்டம் இருந்ததால் அந்த 4 மீனவர்களையும், படகையும் மற்ற மீனவர்கள் மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி கடலில் மாயமான 4 மீனவர்களை பற்றி நேற்று இரவு வரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் ெவளியாகவில்லை. அவர்கள் கதி என்ன? என்பதும் தெரியவில்லை. அவர்களை படகுகளில் சென்று மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் தேடி வருகி்ன்றன. குறிப்பாக மண்டபம் முதல் கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர். மீனவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பரிதவித்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று இலங்கை யாழ்ப்பாணம் கடல் பகுதியில் 2 உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாகவும் அந்த உடல்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்த உடல்கள் யாருடையது? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை அரசும் அதுபற்றிய தகவலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதுகுறித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடலில் மாயமான 4 மீனவர்களைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. இலங்கையில் 2 உடல்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தனர்.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறியதாவது:-
மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். தற்போது தமிழக மீனவர்கள் இடையே அச்சத்தை உருவாக்கும் விதமாக இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை வைத்து மோதி படகை மூழ்கடித்துள்ளனர். இது திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். இனியும் மத்திய-மாநில அரசுகள் அமைதியாக இருக்கக்கூடாது. இந்த சம்பவத்திற்கு இலங்கை அரசு முழுமையான விளக்கம் தெரிவிக்க வேண்டும்.
இது குறித்து இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மத்தியில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story