இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 671 வாக்காளர்கள்
மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாநகராட்சி துணை கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
இது குறித்து கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 வாக்காளர்கள் இருந்தனர். இந்த வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்கவும், திருத்தம் செய்யவும், பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டதில் 91 ஆயிரத்து 407 பேர் சேர்க்கப்பட்டனர். முகவரி மாற்றம் மற்றும் இறப்பு காரணமாக 13 ஆயிரத்து 429 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி தற்போது இறுதி வாக்காளர் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 671 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 13 லட்சத்து 21 ஆயிரத்து 153 பேர் ஆகும். பெண்கள் 13 லட்சத்து 64 ஆயிரத்து 316 பேர் ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 202 பேர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
கடந்த தேர்தலின் போது மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2716 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 1,500 வாக்காளர்கள் வீதம் இருந்தனர். தற்போது கொரோனா காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1,000 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 37 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்காளர் பட்டியல் அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். அதில் பெயர் விடுபட்டு இருந்தாலும், திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து மனு அளிக்கலாம். எனவே அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதனை பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியலை தங்களிடம் வழங்குவது போல் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும், நிகழ்ச்சியில் தங்களை புறக்கணிக்க கூடாது என்றும் கூறி எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். ஆனால் இதனை ஏற்று கொள்ளாத கலெக்டர் அன்பழகன் வெளியிட்டு விட்டு, அங்கிருந்து கிளம்பினார். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story