6 சட்டமன்ற தொகுதிகளில் 15,99,018 வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 வாக்காளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1-1-2021-ந் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது.
அன்று முதல் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை படிவம் 6, 7, 8 மற்றும் 8 ஏ பெறப்பட்டு அதனை அலுவலர்கள் மூலம் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 518 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 93 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்களும், 280 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 வாக்காளர்கள் இறுதி வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான கிருஷ்ணகிரி, ஓசூர் வருவாய் உதவி கலெக்டர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் மற்றும் 1863 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தளி பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் சத்யா, முன்னாள் மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி தலைவர் நந்தகுமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருதயம், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், உதவி கலெக்டர்கள் (கிருஷ்ணகிரி) கற்பகவள்ளி, (ஓசூர)் குணசேகரன், நகராட்சி ஆணையர் சந்திரா, அனைத்து தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story