புலிமேடு கிராமத்தில் எருது விடும் விழாவில் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி
புலிமேடு கிராமத்தில் எருது விடும் விழாவில் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்டம், ஊசூர்அருகே புலிமேடு கிராமத்தில் எருது விடும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மாடு ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதுடன், தேங்காய் நார் மற்றும் மணல் கொட்டப்பட்டிருந்தது. விழா நடக்கும் இடத்தில் கால்நடை பராமரிப்பு துறையினர், கால்நடை மருத்துவர்கள், மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் சரவணமுத்து, பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊசூர் வருவாய் ஆய்வாளர் பூங்கோதை வரவேற்றார்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 82 காளைகள் பங்கேற்றன. காலை 10 மணி அளவில் விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. விழா நடக்கும் வீதிக்குள் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் மதியம் 12 மணிக்கு மேல் பார்வையாளர்கள் வீதியின் உள்ளே இறங்கி ஓடும் மாடுகளுக்கு இடையூறு செய்தனர். இதனால் காளை விடும் திருவிழா 1 மணி அளவில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் காளை உரிமையாளர்கள் தொடர்ந்து மாடுகளை அழைத்து வந்ததால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாடுகள் முட்டியதில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் உடனடி சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story