கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் அமைச்சர் பேச்சு


கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2021 6:02 PM GMT (Updated: 21 Jan 2021 6:02 PM GMT)

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

பவானி,

பவானி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பழனி தலைமை தாங்கினார். அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மோகனா, என்.கோவிந்தராஜ், பவானி தாசில்தார் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.21¼ லட்சம் மதிப்பீட்டில்...

இன்று (அதாவது நேற்று முன்தினம்) பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 353 மாணவிகளுக்கும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 190 மாணவர்களுக்கும் என மொத்தம் 543 பேருக்கு 21 லட்சத்து 31 ஆயிரத்து 103 ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்காக ஆண்டொன்றுக்கு ரூ.25 ஆயிரம் கோடியை தமிழக அரசு செலவு செய்கிறது. ஒரு நாட்டில் கல்வி வளர்ந்தால் தான் நாடு உயரும் என்ற நோக்கத்தோடு அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா சீருடை, காலணி, நோட்டுப் புத்தகம், லேப்டாப், சைக்கிள் உள்ளிட்டவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

அதிகாரிகள் ஆகலாம்

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் மருத்துவர் ஆகலாம் என்கிற கனவையும் நினைவாக்கியுள்ளார். மாணவ-மாணவிகளிடையே கடின உழைப்பும், நல்ல ஒழுக்கமும், நல்ல சிந்தனையும், விடாமுயற்சியும் இருந்தால் இன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எ.ஸ்., டி.என்.பி.எஸ்.சி., வங்கி ஆகிய தேர்வுகளை எழுதி, வெற்றி பெற்று அதிகாரிகள் ஆகலாம். இதற்காக அரசு பல்வேறு வகுப்புகளை நடத்தி வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்-மாணவ-மாணவிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story