முனைஞ்சிப்பட்டி அருகே சங்கர்நகர் குளத்தின் கரையில் உடைப்பு; கால்வாயில் வீணாக செல்லும் தண்ணீர்


முனைஞ்சிப்பட்டி அருகே சங்கர்நகர் குளத்தின் கரையில் உடைப்பு; கால்வாயில் வீணாக செல்லும் தண்ணீர்
x
தினத்தந்தி 22 Jan 2021 1:42 AM IST (Updated: 22 Jan 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

முனைஞ்சிப்பட்டி அருகே குளத்தின் கரை உடைப்பால் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் பாய்ந்து வீணாகிறது.

இட்டமொழி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதற்கிடையே மணிமுத்தாறு அணையின் 1 முதல் 4-வது வரையிலான ரீச்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் முதல் 3 ரீச் மூலம் பாசனம் பெறும் பெரும்பாலான குளங்கள் நிரம்பின. ஆனால் 4-வது ரீச் மூலம் பாசனம் பெறும் திசையன்விளை பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பவில்லை.

வறண்ட குளங்கள்

மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் மூலம் பாசனம் பெறும் முனைஞ்சிப்பட்டி அருகே சங்கர்நகர் குளம், காடன்குளம், கூந்தன்குளம், விஜயநாராயணம் குளம், பட்டஞ்சேரி குளம் ஆகியவை நிரம்பி, விஜய அச்சம்பாடு குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அந்த குளத்தில் பாதியளவு தண்ணீர் உள்ளது.

விஜய அச்சம்பாடு குளம் நிரம்பினால்தான் அதற்கடுத்துள்ள இட்டமொழி குளம், சுப்பிரமணியபுரம் குளம், சுவிஷேபுரம் குளம், அந்தோணியார்புரம் குளம், நல்லம்மாள்புரம் குளம், மகாதேவன்குளம், திசையன்விளை குளம், எருமை குளம், ஆயன்குளம் படுகை, ஆனைகுடி படுகை, கடகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்லும்.

திசையன்விளை பகுதியில் போதிய பருவமழையும் பெய்யாததால், அங்குள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

வீணாகும் தண்ணீர்

இந்த நிலையில் முனைஞ்சிப்பட்டி சங்கர்நகர் குளம் அருகில் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. அங்கு வெள்ளநீர் கால்வாயின் குறுக்காக புதிய பாலம் அமைக்கும் இடத்தின் அருகில், சங்கர்நகர் குளத்தின் கரையும் அமைந்துள்ளது. இதனால் சங்கர்நகர் குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் கால்வாய்க்கு தண்ணீர் அருவி போன்று கொட்டிச் சென்று வீணாகிறது.

வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணியாளர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் சங்கர்நகர் குளத்தின் கரையை அடைக்க முயன்றும் முடியவில்லை. வெள்ளநீர் கால்வாய் பல்வேறு இடங்களில் தனித்தனியாக தோண்டப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் அந்த பணிகள் பாதிக்கப்படுவதுடன், மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச் குளங்களுக்கு போதிய தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. எனவே சங்கர்நகர் குளத்தின் கரை உடைப்பை சீரமைத்து, தண்ணீரின்றி வறண்ட குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story