காரைக்காலில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வலியுறுத்தி அனைத்து அரசுதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


காரைக்காலில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வலியுறுத்தி அனைத்து அரசுதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2021 3:09 AM IST (Updated: 22 Jan 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

அரசு சார்ந்த துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்காலில் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து, காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காரைபிரதேச அரசு ஊழியர் சம்மேளன தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், பொதுச் செயலாளர் ஷேக்அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் அய்யப்பன், சுப்புராஜ், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் மக்கள் மற்றும் ஊழியர் விரோத போக்கை உடனே கைவிட வேண்டும். 1.1.2004- க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் ஊழியர்களுக்கு விரோதமாக செயல்படும் புதுச்சேரி அரசிற்கும், கவர்னருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story