நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து ஒயிட் டவுண் பகுதியில் கெடுபிடிகள் தளர்வு


நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து ஒயிட் டவுண் பகுதியில் கெடுபிடிகள் தளர்வு
x
தினத்தந்தி 22 Jan 2021 4:10 AM IST (Updated: 22 Jan 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உத்தரவினை தொடர்ந்து ஒயிட் டவுண் பகுதியில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

புதுச்சேரி, 

கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டன. இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

கவர்னர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் (ஒயிட் டவுண் பகுதி) தடுப்புகள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. துணை ராணுவப்படையினர், ஐ.ஆர்.பி. போலீசார், உள்ளூர் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் செஞ்சி சாலைக்கு அடுத்த பகுதியான ஒயிட் டவுண் பகுதியில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.

தலைமை தபால் நிலையம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் போன்ற பகுதிகளுக்கும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு செல்பவர்களிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு நடந்து செல்ல மட்டும் அனுமதித்தனர்.

இதன்காரணமாக அவதிக்குள்ளானதை தொடர்ந்து தடுப்புகளை அகற்றி மக்கள் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. அப்போது தடுப்புகள் அமைத்தது தொடர்பாக அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தடுப்புகளை அகற்றி வழக்கம் போல் மக்கள் நடமாட அனுமதிக்கவேண்டும். ஒரு நாள் அவகாசத்துக்குள் தடுப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று தலைமை செயலகம், தலைமை தபால் நிலையம், மணக்குள விநாயகர் கோவில், செஞ்சி சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அதன்வழியாக பொதுமக்கள் எந்தவித தடையுமின்றி வந்து சென்றனர். போலீஸ் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது. கவர்னர் மாளிகை, சட்டசபை பகுதிகளில் மிகக்குறைந்த அளவில் துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த கெடுபிடிகள் தளர்வு காரணமாக பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Next Story