செவிலியர் வீட்டில் திருடிய 3 வாலிபர்கள் கைது 30 பவுன் நகைகள் பறிமுதல்
அரசு செவிலியர் வீட்டில் நகைகள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி,
புதுச்சேரி வெண்ணிலா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி நிவெர்ச்சி (வயது 56) புதுவை அரசு பொது மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் களுடைய மகன் ஸ்டீபன் ராஜும், மகளும் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்கள். எனவே நிவெர்ச்சி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நிவெர்ச்சி அவரது அறையில் உள்ள பீரோவில் இருந்த நகைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சரிபார்த்தார். அப்போது தங்க சங்கிலி, நெக்லஸ், வளையல், மோதிரம் என 40 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. ஆனால் வீட்டின் கதவு, பீரோ ஆகியவை எதுவும் உடைக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிவெர்ச்சி, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஜீத், வெங்கடாசலபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஸ்டீபன்ராஜ் நண்பரான கோவிந்தசாலையை சேர்ந்த மைக்கேல் சுதன் (24) நிவெர்ச்சி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மைக்கேல் சுதன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நானும், ஸ்டீபன்ராஜும் கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எனவே அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வேன். அப்போது அவருடைய குடும்பத்தினர் அனைவரிடமும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சகஜமாக சென்று வருவேன். அந்த வீட்டின் கதவு, பீரோ ஆகியவற்றின் சாவிகள் வைக்கும் இடம் எனக்கு தெரியும்.
அதன் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு 10 பவுன் நகைகளும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 பவுன் நகைகளையும் திருடினேன். அந்த நகைகளை எனது நண்பர்களான கார் டிரைவர் எழில்நகர் கிஷோர் (25), முதலியார்பேட்டை சூர்யா (29) ஆகியோர் உதவியுடன் விற்று பணத்தை பங்கு வைத்துக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து மைக்கேல் சுதனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவரது நண்பர்களான கிஷோர், சூர்யா ஆகியோரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஜீத், வெங்கடாசலபதி, ஏட்டு புவனேஷ், போலீஸ்காரர்கள் ராஜரத்தினம், செல்லத்துரை ஆகியோரை கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் பாராட்டினார்.
Related Tags :
Next Story