இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும்; ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
தேர்வு முடிவுகள்
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், ஜெயலலிதா வழியில் புதிய புதிய திட்டங்களை தமிழ்நாட்டில் கல்வி துறைக்காக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக ‘ரேங்க் சிஸ்டம்’ ஒழிக்கப்பட்டு உள்ளது. குறுஞ்செய்தி மூலம் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. புதிய கல்வி கொள்கை மற்றும் புதிய பாடத்திட்டங்கள் எல்லோரும் பாராட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவ படிப்பு
7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்தியாவிலேயே எந்த முதல்-அமைச்சரும் சிந்திக்க முடியாத சிந்தனை ஓட்டத்தின் அடிப்படையில் நம்முடைய முதல்-அமைச்சர் அதை நிறைவேற்றி தந்திருக்கிறார். அதன்பேரில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 405 பேருக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மருத்துவ தரவரிசைப்பட்டியலில் 720 முதல் மதிப்பெண்ணாகவும், 510 இறுதி மதிப்பெண்ணாகவும் உள்ளது. ஆனால் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் 147 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட மருத்துவம் கிடைக்கிறது.
மேலும் அவர்களுடைய பள்ளி கட்டணம், விடுதி கட்டணத்தையும் அரசே ஏற்றுள்ளது. இதற்கு முன்பு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு அனைத்தும் அரசே ஏற்றுக்கொண்டது. தற்போது மருத்துவ கல்லூரி படிப்பும் இலவசமாக வழங்கும் வரலாறு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய அட்டவணை
மடிக்கணினியை பொறுத்தவரையில் தொழில்நுட்ப பிரிவு அமைச்சரை தான் கேட்க வேண்டும். அவர்கள் தான் எங்களுக்கு வாங்கி கொடுக்கிறார். அதைத்தான் நாங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம். அரசு பள்ளிக்கூடங்களில் தற்போது அதிக அளவில் மாணவ-மாணவிகள் சேர்ந்து வருகிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்காக புதிய அட்டவணை வெளியிடப்படும். அந்த பணிகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும். ஆசிரியர் தகுதி தேர்வில் 2013 மற்றும் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி அடிப்படையில் மதிப்பெண் பெற்றிருக்கிறார்களே தவிர வேலைவாய்ப்பு என்பது எவ்வளவு பணிகள் இருக்கிறதோ அந்த பணி இடங்களை மட்டுமே நாம் நிரப்ப முடியும்.
ராஜகோபுரம்
அதற்கு பின்னர் கூடுதலாக பணி நிரப்ப வேண்டும் என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருக்கிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்பதை அரசு முதலில் அட்டவணை மூலம் வெளியிடும். அதற்கு பிறகுதான் கூடுதலாக நிரப்ப முடியும். அதற்கு மேலும் இருந்தால் தேர்வு வைத்து தான் நிரப்ப முடியுமே தவிர வேறு வழியில்லை. பள்ளி கல்வித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நிரப்பப்படும்.
பண்ணரி மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் பள்ளிக்கூடத்தில் கூடுதல் கழிப்பறைகள் கட்ட மத்திய அரசிடம் இருந்து ரூ.500 கோடி நிதி கேட்கப்பட்டு உள்ளது. மத்திய அரசும் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நிதி கிடைத்த உடன் ஒவ்வொரு மகளிர் பள்ளிக்கூடத்திலும் கூடுதலாக 2 கழிப்பறைகள் கட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
Related Tags :
Next Story