அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற அறைகளில் குடியேறிய நாய்கள்; அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரியலூரில் அரசு கட்டிடத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள அறைகளில் நாய்கள் குடியேறியுள்ளன. அந்த கட்டிடத்தில் அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திறந்து கிடக்கும் அறைகள்
அரியலூரில் கடந்த 2004-ம் ஆண்டு 25 அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் ஜெயங்கொண்டம் சாலையில் கட்டப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உருவானபோது இந்த இடத்தில்தான் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டது. பின்னர் கட்டிடத்தின் முதல் தளத்தில் மாவட்ட காவல்துறை அலுவலகம் தொடங்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவல்துறை அலுவலகம், சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டபோது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மேஜை, நாற்காலிகள், பீரோக்கள் மற்றும் தளவாட பொருட்களை எடுத்துச் சென்றனர்.
ஆனால் தேவையில்லாத காகிதங்கள் மற்றும் குப்பைகள் அங்கேயே விடப்பட்டுள்ளது. 6 மாதங்களாக முதல் தளம் காலியாக உள்ளது. பயன்பாடின்றி உள்ள சில அறைகளில் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. ஒரு பாழடைந்த கட்டிடம் போல் அந்த இடம் காட்சியளிக்கிறது. திறந்து கிடக்கும் அறைகளில் நாய்கள் குடியேறியுள்ளன.
மாத வாடகையில்...
இந்த கட்டிடம் பொதுப்பணித்துறை (கட்டிடப் பிரிவு) கட்டுப்பாட்டில் உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் தான் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. அரியலூர் நகரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், தொழிலாளர் நலத்துறை, நகர கட்டமைப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த கட்டிடங்களுக்கு மாத வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அலுவலகங்களை காலியாக உள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடத்திற்கு மாற்றினால், அரசுக்கு ஒரு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் மாத வாடகை செலவு குறையும். கட்டிடமும் சேதமடையாமல் அழகாக இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பது ெபாதுமக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஆகும்.
கோரிக்கை
இந்த வளாகத்தில் மாவட்ட பத்திரப்பதிவு துறை, தோட்டக்கலைத் துறை, உணவுத்துறை அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளன. அந்தப் பகுதி முழுவதுமே கருவ மரங்கள் முளைத்து அடர்ந்த காடுபோல் காட்சி அளிக்கிறது. இரவில் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஒரு மின் விளக்கு கூட எரிவதில்லை. மாவட்ட போலீஸ் அலுவலகம், அந்த கட்டிடத்தில் செயல்பட்ட வரையில் மற்ற அலுவலகங்களுக்கும் பாதுகாப்பாக இருந்தன. தற்போது கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்பது, அங்கு வரும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
Related Tags :
Next Story