பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கலெக்டர் ஆய்வு


பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jan 2021 6:16 AM IST (Updated: 22 Jan 2021 6:16 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் பரங்கிப்பேட்டை அடுத்த ஆதிவராகநல்லூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிச்சிக்குடி, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வாழைக்கொல்லை மற்றும் தெற்குவிருதாங்கன் ஆகிய பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்ட கலெக்டர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

காட்டுமன்னார்கோவில்

இதையடுத்து காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழகன், திருநாரையூர் பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களையும், வீரனந்தபுரம் பகுதியில் மணிலா பயிர்களையும், குமராட்சி ஊராட்சி ஒன்றியம் நடுத்திட்டு, பிள்ளையார்தாங்கல் ஆகிய பகுதியில் நெற்பயிர்களையும் முருகுமாறன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோவில் வட்டம் மா.புளியங்குடியில் இருந்து குமராட்சி வட்டம் வல்லம்படுகை வரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா, தாசில்தார் ராமதாஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வங்கி கணக்கில் நிவாரணம்

பின்னர் கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக 43 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 82 ஆயிரத்து 500 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது 72,500 பேருடைய வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்கிடையில் தற்போது பெய்த மழையால் கூடுதலாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சித் துறை ஆகிய குழுக்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. விரைவில் அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story